Sunday 9 September 2012

பாடல்கள்


இசையைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் அவ்வளவு எளிதில் சொல்லி முடித்துவிட முடியுமா என்ன! மனித குலத்திற்கு கிடைத்த பெரு வரமன்றோ இசை.. அதற்குத்தான் எத்தனை பரிமாணங்கள்! அந்த வகையில் புண்ணியம் செய்தது தான் தமிழ்த் திரை இசை.. காலம் நல்ல இசை படைப்பாளர்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டே தான் இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் வயதில் சிறியவராக இருந்தாலும் கீர்த்தியில் பெரியவர் அல்லவா! (ஆஸ்காரையும் தாண்டி..) அவரது எத்தனையோ மயக்கும் பாடல்களில் ஒன்று 'மயிலிறகே, மயிலிறகே' என்ற மனம் வருடும் பாடல்... ஆனால் நான் சொல்ல வந்தது பாடலைப் பற்றி அல்ல, அந்தப் பாடல் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தைப் பற்றி..மிக மோசமாகப் படமாக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று அதுவாக இருக்கலாம்..எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பும், நடனமும் (?) இனிமையான ஒரு பாடலை சின்னாப்பின்னமாக்கி இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

நன்கு படமாக்கப்பட்ட பாடல்கள்..என்றால் எத்தனையோ பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர். பாடல்கள் மனதில் ஓடுகின்றன.. வாத்தியார் நடித்த 'புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக,' என்ற பாடல் ஒரு மழைக் காட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இனிமையாக.. சிவாஜி நடித்த 'காணா இன்பம் கனிந்ததேனோ' என்ற பாடலும் மெல்லிய சாரலில் கவித்துவமாக படமாக்கப்பட்டிருக்கும்...சமீப காலத்தில், யுவன் இசை அமைத்த 'அடடா அடடா அட மழை டா' பாடலும் ரசனையோடு படமாக்கப்பட்ட பாடல்! (நீங்க உருப்பட மாட்டீங்க..என்று முணுமுணுக்கிறார் என் மனைவி!)
                                             
                                                                    ***

எழுத்து


கையில் எது கிடைத்தாலும் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தது ஒரு காலம்..இப்போதெல்லாம் அதிகம் படிக்க முடிவதில்லை. ஆசையாய் வாங்கி வைத்தும், இன்னும் படித்து முடிக்காத எத்தனையோ புத்தகங்கள் அலமாரியில் !
ஆனால் ஜெயமோகனின் எழுத்து.. படிப்பதில் கண்ட பழைய மோகத்தை மீட்டுத் தருகிறது..அவருடைய 'நிகழ்தல்' புத்தகத்தை (உயிர்மை வெளியீடு-2008) சமீபத்தில் படிக்க வாய்த்தது. சுய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு. தன் எழுத்தில் ஒரு புகைப்படத்தின் துல்லியத்துடன் காட்சிகளை அனுபவமாக்கித் தருகிறார் ஜெயமோகன். மாதிரிக்கு, 'பிரிவின் விஷம்' என்ற கட்டுரையில் இருந்து முதல் பாரா மட்டும்: (நன்றியோடு)

" வாழ்க்கையை வகுத்துச் சொல்லச் சொன்னால் இப்படி சொல்லுவேன். உறவும், பிரிவும். அவ்வளவு தான்' என்றார் மலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு முழு போதையில். பயங்கரமான ஒரு ஏப்பம். இமைகளை முழு மூச்சாக உந்தி மேலே தூக்கி சிவந்த விழிகளால் என்னைப் பார்த்து 'ஆனால் என்ன விஷயம் என்றால் பிரிவுக்கு உறவை விட நூறு மடங்கு எடை அதிகம்'. ஒரு நிமிட நேரம் தூங்கிய பிறகு கண்ணைத் திறந்து, சட்டைப்பையை மார்பெங்கும் தேடிக் கண்டுபிடித்து, மொத்தக் கையையும் உள்ளே விட்டுத் துழாவி, கசங்கி முதுமை எய்திவிட்டிருந்த சிகரெட்டை எடுத்து, வாய்க்காகத் தேடியபடி 'தீப்பட்டியை எடுடா மயிரே' என்றார்..  

..எனக்கு பாலச்சந்திரன் சுள்ளிக்காடோடு அதே அறையில் இருந்தது போன்ற உணர்வு.!. 

                                                               ***

கோவில்


திருச்செந்தூர் ஆகட்டும், தஞ்சாவூர் ஆகட்டும், மதுரை ஆகட்டும்,  ஸ்ரீரங்கம் ஆகட்டும்... எந்த கோவிலுக்குப் போனாலும் ஒரு பிரமிப்பு ஏற்படாமல் இருப்பதில்லை! எப்படி கண்ணால் காண இயலாத தெய்வத்துக்கு இவ்வளவு பிரம்மாண்டமாக கோவில்களைக் கட்டத் தோன்றியது!..உலகில் வேறெங்கும் இது போல் பார்க்க முடிவது இல்லையே! எப்படி பண்டைய தமிழ் நாட்டில் மட்டும் இது சாத்தியமாகியது?! கட்டிய அரசனின் சாம்ராஜ்யம் காலப் பெருவெள்ளத்தில் காணாமல் போய்விட்டாலும், அவன் கட்டிய கோவில் காலத்தை வென்று, ஏதோ ஒரு செய்தியை மௌனமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது!
                                                                       
பாராட்டுபவர்கள் , வியப்பவர்கள், வியாக்கியானம் செய்பவர்கள், வெறுப்போடு விமர்சிப்பவர்கள்..எல்லோரும் கால வெள்ளத்தில் காணாமல் போன பிறகும், தேடி வருவோர்க்கு சாந்தியும் அமைதியும் தந்து கொண்டு நெடிது வாழ்கின்றன நம் கோவில்கள்..  

                                                                         ***